Archive | October, 2014

நான் வேலை இல்லா பட்டதாரி – வேலை விடும் பாகம்

21 Oct

“வேலை இல்லா பட்டதாரி” என்றவுடன் அனைவருக்கும் ஏதோ படித்துவிட்டு வேலைகிடைக்காத இளைஞன் தான் நினைவுக்கு வரும்.

இது கொஞ்சம் வேறமாதிரி.

பல காலம் பணியாற்றிவிட்டு, ஏதோ ஒரு காரணத்தில் வேலையைவிட்டு, பல பிடித்த விஷயங்களை முயற்சி செய்துவிட்டு, மீண்டும் வேலை தேடி…பல பல்புகளை வாங்கி…மீண்டும் வேலையில் அமர்ந்த என் கதை.

‘தன் காலில் நின்ற ஒரு நல்ல குழுவுக்கு நான் மேலாளராக நியமிக்கப்பட்டேன். நாட்டில் எல்லாம் நன்கு நடந்தால் தலைவனுக்கு என்ன வேலை. எனக்கு அரசியல் நன்கு தெரிந்திருந்தாலும், அரசியல் செய்ய பிடிக்கவில்லை. ஒரு வேளை அரசியல் செய்திருந்தால் குழப்பம் ஏற்படுத்தி குளிர் காய்ந்து இருக்கலாம். அல்லது ‘உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர் விளம்பர பாணியில் அலுவலகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ‘என்ன ஆச்சு ….நீ குழந்தையா இருக்கச்ச…’ என்று அழையா விருந்தாளியாக அருள் வாக்கு தந்திருக்கலாம்.

என் வேலை நிமித்தம் வரும் 400 இமெயிலில் குறைந்தபட்சம் 120 பொருள்/இரகசியம் செறிந்த (context rich) இமெயிலை படித்து வேலை செய்ய வேண்டும்.

இமெயில் படிப்பதை உலகத்துக்கு எவ்வாறு உணர்த்துவது.

இதையெல்லாம் விட என் மேலாளர் என் குழுவையும் என்னையும் நிர்வகித்ததால் ‘நான் மன்மோகன்சிங் போலும் அவர் சோனியாகாந்தி போலும்’ என் குழுவினர் கண்களுக்கு தென்பட்டேன்.

பலமுறை இராஜினாமாவுக்கு முயன்றிருக்கிறேன், அன்று பார்த்து மேலாளர் கண்ணில் படமாட்டார், மனம் மாறிவிடும்.

கடைசியில் இராஜினாமா செய்துவிட்டேன்.

அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாது, ஆனால் மனம் ஆனந்த கூத்தாடியது.

நான் அவ்வளவு மட்டமான வேலையாளா? வேலை பார்த்த பல மாதங்களில் ஒரு பாராட்டும் வழிகாட்டுதலும் இன்றி தவித்திருக்கிறேன்.

வேலையை விட்ட சிலமாதங்களில் புதிதாக என் பழைய வேலையில் அமர்ந்தவர் சமூக வலைதளத்தில் என்னை அணுகி சொன்னார் “உங்களால் எப்படி இவ்வளவு மாதங்கள் இங்கு பணியாற்ற முடிந்தது?” (அவர் பணிக்கு சேர்ந்து 1 மாதம் தான் ஆகி இருந்தது, அவரை எனக்கு இதற்கு முன் தெரியாது).

எனக்கு நோபல் பரிசு பெற்ற ஒரு சந்தோஷம்….